All publications of Kushpoo Kumari . Chennai , India
ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி வகையில் மகாராஷ்டிராவில் பல்வேறு நாடகங்களை பாரதிய ஜனதா கட்சி அரங்கேற்றி உள்ளது. பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி அமைத்தது, அதன் பிறகு மீண்டும் அடுத்த கட்சிக்கு வாய்ப்பு தராமல் ஆளுநர் உதவியுடன் ஜனாதிபதி ஆட்சியை அவசரகதியில் கொண்டு வந்தது, அதன் பிறகு வெளியே யாருக்கும் தெரியாமல் திடீரென ஜனாதிபதி ஆட்சியை விலக்கியது, அதன்பிறகு தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து, ரகசியமாக பதவியேற்றுக் கொண்டது என இதுவரை இந்திய அரசியலில் இல்லாத வகையில் பல்வேறு ஜனநாயக விதிமுறைகளை பாரதிய ஜனதா கட்சி செய்துள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் இந்தியா முழுவதும் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள கட்சித் தலைவர்களும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். திமுக தலைவர் மு க ஸ்டாலின், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி உள்ளிட்ட பலரும் பாஜகவின் இச்செயலுக்கு தங்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள பாரதிய ஜனதா கட்சியின் தேவேந்திர பட்னாவிஸுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தேவேந்திர பட்னாவிஸுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள எடப்பாடி பழனிச்சாமி, முதலமைச்சர் பதவி ஏற்றதற்கு வாழ்த்துக்கள் என்றும் பதவி காலத்தை முழுமையாக நிறைவு செய்ய வாழ்த்துகிறேன் என்றும் தெரிவித்துள்ளார். பன்னீர்செல்வம் தன்னுடைய ட்விட்டர் தளத்தில் முதல்வராக பொறுப்பேற்றுள்ள தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ள அஜித் பவார் ஆகியோருக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவுக்கு அடுத்தபடியாக அதிமுகவின் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என, சசிகலாவை வலியுறுத்திய பலரும் இன்று சசிகலாவை வெளியேற்றிவிட்டு ஆட்சியையும் கட்சியும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். சசிகலா அவர்களின் காலை தொட்டு ஆசிர்வாதம் பெற்று ஆட்சி அமைத்தவர்கள் இன்று சசிகலாவை நினைத்துப் பார்ப்பதில்லை.
இன்னிலையில் சசிகலா குறித்து கருத்து தெரிவித்திருக்கும் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்பிரமணியசாமி, சசிகலா சிறையில் இருந்து வெளியே வரும் பட்சத்தில் அதிமுக தொண்டர்கள் அவருக்கு பின்னால் அணிவகுப்பு என்று தெரிவித்துள்ளார். செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த சுப்பிரமணியன் சாமி, சசிகலா குறித்த கேள்விகளுக்கும் சசிகலா வெளியே வந்தால் என்ன மாதிரியான அரசியல் மாற்றங்கள் நிகழும் என்பது குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார்.
சசிகலாவின் சிறைக்காலம் இன்னும் ஓர் ஆண்டுகள் மட்டுமே இருப்பதாகவும், அவர் விரைவில் வெளியே வருவார் எனவும் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார். மேலும் சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் அதிமுக தொண்டர்கள் அனைவரும் அவருக்கு பின்னால் சென்று விடுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதிமுகவை திறமையாகவும் சிறப்புடனும் நடத்தும் அனைத்து திறமையும் சசிகலாவிடம் உள்ளது எனவும், சசிகலா தலைமையில்தான் அதிமுக பிளவுபடாமல் இருக்கும் எனவும் சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தலில் மறைமுக தேர்தல் முறை கொண்டு வரப்பட்டுள்ளது குறித்து எவ்வளவு பேசினாலும், மேலும் பேசுவதற்கு தகவல்கள் இருக்கும் அளவுக்கு திமுக மற்றும் அதிமுக இடையே வார்த்தைப் போர் நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் என தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், தேர்தல் ஆணையம் தேதி அறிவிக்கும் முன்பே உள்ளாட்சித் தேர்தலுக்கு திமுக மற்றும் அதிமுக கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உள்ளாட்சித் தேர்தல் நேரடி வாக்கெடுப்பு முறை மூலமாக மட்டுமே நடைபெறும் என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். ஆனால் இந்த அறிவிப்பு வெளியான ஒரு சில நாட்களுக்குள்ளேயே அந்த அறிவிப்பை மாற்றி மறைமுகத் தேர்தல் நடைபெறும் என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். எடப்பாடி பழனிச்சாமியின் இந்த அறிவிப்புக்கு திமுக கண்டனம் தெரிவித்திருந்தது.
இதற்கு பதில் அளித்து இருந்த எடப்பாடி பழனிச்சாமி, திமுக ஆட்சியில் தான் முதல்முறையாக மறைமுகத் தேர்தல் கொண்டு வரப்பட்டது எனவும், இதுகுறித்த சட்டமன்ற பதிவுகளையும் மேற்கோள் காட்டியிருந்தார். அதற்கு பதிலளித்துள்ள திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள், உள்ளாட்சி தேர்தலில் மறைமுகத் தேர்தல் முறையை திமுக கொண்டு வந்திருந்தாலும் அதற்காக முயற்சிகளையும் போராட்டங்களையும் செய்தது அதிமுகதான் என ஆதாரங்களுடன் பட்டியலிட்டுள்ளார். உள்ளாட்சி தேர்தலில் மறைமுக தேர்தலை கொண்டுவர வேண்டுமென தொடர்ந்து அதிமுக போராடியதன் காரணமாகவே திமுக மாற்றத்தைக் கொண்டு வந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளன், சில நாட்களுக்கு முன்பு பரோலில் விடுதலை செய்யப்பட்டார். ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் பேரறிவாளன் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என தமிழ் ஆர்வலர்கள் பலரும் போராடி வருகின்றனர். பேரறிவாளனின் வாக்குமூலத்தை பதிவு செய்த சிபிஐ அதிகாரி, தான் தவறுதலாக சில விஷயங்களை சேர்த்து விட்டதாகவும், இதன் காரணமாகவே பேரறிவாளன் குற்றவாளியாக கருதப்பட்டார் எனவும் சில ஆண்டுகளுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.
ஆயினும் பேரறிவாளனை விடுதலை செய்வது முடியாத காரியமாகவே இருந்துவருகிறது. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக்காக, தமிழ்நாடு முழுவதும் பல போராட்டங்கள் நடைபெற்ற போதும், மத்திய மாநில அரசுகளின் முரட்டுப் பிடிவாதத்தால் தவறு செய்யாத 7 பேர் தொடர்ந்து 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் அவலம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பேரறிவாளன் தந்தை உடல் நலம் பாதிக்கப்பட்டதாலும், பேரறிவாளனின் தங்கை மகள் திருமணம் நடைபெற இருந்த காரணத்தாலும் பேரறிவாளனுக்கு நீதிமன்றம் பரோல் வழங்கியுள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் சிறையில் இருந்து வெளியான பேரறிவாளன் தன்னுடைய சொந்த ஊரான அரக்கோணத்திற்கு சென்றார். இந்நிலையில் கிருஷ்ணகிரியில் நடைபெறும் தன்னுடைய தங்கை மகள் திருமணத்திற்காக நேற்று கிருஷ்ணகிரிக்கு சென்றுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநில கட்சிகள் மற்றும் தேசிய கட்சிகள் என அனைத்துக் கட்சிகளுடனும் கூட்டணி வைத்த ஒரே கட்சி என்ற பெயரை பெற்றது பாட்டாளி மக்கள் கட்சி. ஒவ்வொரு தேர்தலுக்கும் எந்தவித தயக்கமுமின்றி கூட்டணி மாறுவதும், தேவையான தொகுதிகளைக் கேட்டுப் பெறுவதும், அதன் பிறகு மத்தியில் அமைச்சரவையில் இடம் பெற முயற்சிப்பதும் என பல்வேறு வகையில் சிறந்த முறையில் அரசியல் நடத்தி வருகிறது பாட்டாளி மக்கள் கட்சி.
நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு சில மாதங்களுக்கு முன்பு வரை அதிமுகவை மிக மிக கடுமையாக விமர்சித்து வந்தது பாட்டாளி மக்கள் கட்சி. குறிப்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்களை வெளிப்படையாக டயர் நக்கிகள் என்று விமர்சனம் செய்திருந்தார். எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகியோரை அவர்கள் வகிக்கும் பதவியை கூட கருத்தில் கொள்ளாமல், ஒருமையில் டயர்நக்கிகள், அறிவற்றவர்கள் என்றெல்லாம் பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி ராமதாஸ், அடுத்த சில மாதங்களிலேயே நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து அவர்களை புகழ்ந்து பேசத் தொடங்கியிருந்தார்.
அதிமுகவுடன் கூட்டணி வைத்த பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து பாஜகவுக்கு சாமரம் வீசும் வேலைகளில் ஈடுபட்டு வந்தது. ஆனால் தற்போது மகாராஷ்டிராவில் நடைபெற்ற அரசியல் குழப்பங்கள் குறித்து தன்னுடைய டுவிட்டர் தளத்தில் கருத்து தெரிவித்திருக்கும் ராமதாஸ் ‘சந்தர்ப்பவாதம்’ என்று பாஜகவை குறை கூறியுள்ளார். இதன்மூலம் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்கு தயாராகி வருவதாக தெரிகிறது.
முன்பெல்லாம் பேச்சாற்றல் மூலமும் எழுத்தாற்றல் மூலமும் மக்கள் மத்தியில் கட்சியை கொண்டு சேர்த்து வந்த நிலையில், தற்போது கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலம் மக்களிடையே அரசியல் கட்சிகளை கொண்டு செல்லும் நிலைக்கு தற்கால அரசியல் தள்ளப்பட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டு நரேந்திர மோடி ஆட்சி அமைப்பதற்கு பின்னணியில் இருந்து செயல்பட்டவர் என மக்களிடையே அறிமுகப்படுத்தப்பட்டவர் பிரசாந்த் கிஷோர். அரசியல் கட்சிகள் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் எப்படியெல்லாம் மக்களிடையே பேச வேண்டும் என்பதெல்லாம் குறித்து இவருடைய கார்ப்பரேட் நிறுவனம் சொல்லும்படி, அரசியல் கட்சிகள் செய்ய வேண்டும் என்பதையே இவர்களுடைய நிபந்தனைகள். அதன்படி இந்த நிறுவனங்கள் வகுத்துத் தரும் பாதையில் இந்தியா முழுவதும் உள்ள கட்சிகள் செயல்பட்டு வருகின்றன.
கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சி பிரசாந்த் கிஷோர் அறிவுரைப்படி நடந்து வருகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சி அதிக வாக்குகளைப் பெற்ற பின்னணியில் பிரசாந்த் பூசன் உள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைய உள்ளார்கள் என்று செய்திகள் வெளியான பின்னணியில் பிரசாந்த் பூஷன் உள்ளார் என்று சொல்லப்படுகிறது. கமலும் ரஜினியும் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கும் பட்சத்தில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கலாம் என பிரசாந்த் பூஷன் கருதுவதாகவும், அதனடிப்படையிலேயே இருவரையும் இணைக்கும் முயற்சியில் பிரசாந்த் பூஷன் ஈடுபட்டு வருவதாகவும் தெரியவருகிறது. எது எப்படியோ மக்களுக்காக கட்சி நடத்துவதை விட்டுவிட்டு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு கட்சி நடத்தும் காலம் தொடங்கி விட்டது என்பதே உண்மை.
காலில் செய்யப்பட்டுள்ள அறுவை சிகிச்சை காரணமாக ஓய்வில் இருக்கும் நடிகர் கமல்ஹாசன் அவர்களை, திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தது தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மு க ஸ்டாலின் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் நீண்டகாலமாக நண்பர்களாக இருந்து வந்தபோதும், சமீப காலமாக இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. மக்கள் நீதி மையம் கட்சியை கமல்ஹாசன் தொடங்கியது முதலே திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். குறிப்பாக திமுகவை குறித்துப் பேசும்போதெல்லாம் வாரிசு அரசியல் குறித்தும் கமல்ஹாசன் பேசி வருகிறார். சில இடங்களில் ஸ்டாலின் குறித்து விமர்சனங்களையும் கமல்ஹாசன் முன்வைக்க தவறுவதில்லை. இதனால் கமல்ஹாசனுக்கும் திமுக தலைவர்களுக்கும் இடையே கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டு வருவது இயல்பாக இருந்துவருகிறது.
இந்நிலையில் கமல்ஹாசனை திமுக தலைவர் மு க ஸ்டாலின் நேரில் சந்தித்து இருப்பதற்கு அரசியல் காரணங்கள் சொல்லப்பட்டு வருகின்றன. நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மையம் கட்சியும் திமுகவும் கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். கட்சி ஆரம்பித்த ஒரு வருடத்திற்குள் மக்கள் மத்தியில் மக்கள் நீதி மையம் கட்சியை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்ததுடன், நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 4 சதவீத வாக்குகளை கமல்ஹாசன் பெற்றுள்ளார். இந்நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் மற்றும் திமுக கூட்டணி வைக்கலாம் என பேச்சு எழுந்துள்ளது.
டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியை முறைப்படி தனிப்பட்ட கட்சியாக பதிவு செய்யும் வேலைகள் நடைபெற்று வருவதாகவும், கட்சிக்கான அங்கீகாரம் கிடைக்கும் பட்சத்தில் உள்ளாட்சித் தேர்தலில் ஒரே சின்னத்தில் போட்டியிடுவோம் எனவும், அப்படி நடைபெறாத பட்சத்தில் சுயேட்சையாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிடும் எனவும் தெரிவித்துள்ளார்.
அடுத்து வரும் சட்டப்பேரவை தேர்தலை மனதில் வைத்தே அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யும் பணிகள் நடைபெற்று வந்ததாகவும், இதன் காரணமாகவே நடைபெற்ற இடைத்தேர்தல்களில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிடவில்லை எனவும் தெரிவித்துள்ளார். ஆயினும் உள்ளாட்சித் தேர்தல் வரும் பட்சத்தில் கட்சிக்கு பதிவு கிடைக்காவிட்டாலும் சுயாட்சி சின்னத்தில் போட்டியிடுது என அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் முடிவு செய்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் முக்கிய நோக்கம் எதிர்கட்சியான திமுக மற்றும் துரோகிகளான அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் ஆட்சிக்கு வர விடாமல் செய்வதுதான் எனவும் அவர் தெரிவித்துள்ளார். உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் யோசனை ஆளும் அதிமுகவுக்கு இல்லை எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலில் நேரடித் தேர்தல் முறை நடைபெறும் என்று அறிவித்த சில நாட்களுக்குள்ளேயே, மறைமுக தேர்தல் நடைபெறும் என தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மாற்றி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை திமுக கடுமையாக எதிர்த்தது. திமுகவின் எதிர்ப்பு மற்றும் விமர்சனங்களுக்கு பதில் அளித்துள்ள எடப்பாடி பழனிச்சாமி, நேரடி தேர்தல் முறையாக இருந்த உள்ளாட்சித் தேர்தலை மறைமுகத் தேர்தல் மாற்றியதே திமுகதான் என தெரிவித்தார்.
1996ம் ஆண்டு நேரடி தேர்தலாக இருந்துவந்த உள்ளாட்சித் தேர்தல்களை மறைமுக தேர்தல் முறையாக மாற்றும்போது, குஜராத் மற்றும் ஒரிசா ஆகிய மாநிலங்களில் மறைமுக தேர்தல் முறை தான் இருந்து வருகிறது என்று கூறியவர் மு க ஸ்டாலின் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நகராட்சி தலைவர்கள் ஒரு கட்சியிலும் பெரும்பான்மையான கவுன்சிலர்கள் வேறு கட்சியில் இருந்தால் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த முடியாது என்று கூறி, மறைமுகத் தேர்தல் முறையை கொண்டு வரும்போது ஸ்டாலின் தெரிவித்திருந்ததை அவர் நினைவுகூர்ந்தார்.
திமுக ஒன்றை செய்வதும், அதையே நாங்கள் செய்தால் தவறு என்று சொல்வதும் வாடிக்கையாக இருந்து வருகிறது எனவும், மாமியார் உடைத்தால் மண் குடம் மருமகள் உடைத்தால் பொற்குடமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுகவுக்கு தேர்தலை கண்டு பயம் இல்லை என்றும் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் இன்று பூஜ்ஜிய நேரத்தின்போது, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் திரு வைகோ அவர்கள், விமான ஒலிபரப்புகள் தமிழில் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார்.
ஒரு காலத்தில் விமானப்பயணம் என்பது சொகுசு பயணம் என்றும், மிகப்பெரிய பணக்காரர்கள் மட்டுமே விமானத்தில் பயணம் செய்ய முடியும் என்ற நிலை தற்போது மாறி, வேலை மற்றும் தொழில் காரணமாக விமானத்தில் பயணிப்பது சாதாரணமாகிவிட்டது என்று தெரிவித்தார். சின்னவயதில் விமானங்களை வானத்தில் பார்க்கும்பொழுது அதுவும் ஒரு பறவை என்றே நினைத்திருந்தேன் என்றும், ஆனால் இப்போதெல்லாம் விமானப் பயணம் என்பது மிகவும் எளிதாகி விட்டது என்றும் தெரிவித்தார். விமானங்களில் அறிவிப்புகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே இருப்பதாகவும், இதனால் ஆங்கிலம் மற்றும் இந்தி தெரியாத மக்கள் சிரமப்படுவதாக அவர் தெரிவித்தார். எனவே அந்தந்த மாநில மொழிகளில் விமானங்களில் அறிவிப்புகள் வெளியிடப்படும் எனவும் கேட்டுக்கொண்டார்.
குறைந்தபட்சம் மாநிலங்களுக்கு உள்ளே செல்லும் விமானத்தில் அந்தந்த மாநில மொழிகளில் அறிவிப்புகள் வெளியிட வேண்டும் என தெரிவித்தார். உதாரணமாக சென்னையிலிருந்து திருச்சி, சென்னையிலிருந்து கோவை செல்லும் விமானங்களில் அறிவிப்புகள் தமிழில் செய்யப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கையை இங்குள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏற்றுக்கொள்வார் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். வைகோ அவர்கள் பேசி முடித்தவுடன் வைகோ பேச்சுக்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர். மாநிலங்கள் அவையின் தலைவர் வெங்கையா நாயுடு இதை உடனடியாக செயல்படுத்த உத்தரவிட்டார்.