All publications of Pooja Arjun . Chennai , India
கர்நாடக மாநிலத்தின் சிவமொக்கா மாவட்டத்தில், 600 ஆண்டுகள் பழமையான பத்தகத்தே ஹீரே மடம் அமைந்துள்ளது. இம்மடத்திற்கு, ராணி சென்னம்மா அவர்கள், 1672 ஆம் ஆண்டு விலை மதிப்புமிக்க மரகத லிங்கம் ஒன்றை நேர்த்திக்கடனாக கொடுத்திருந்தார். ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி இன் போதும் அந்த மரகதலிங்கம் மடத்தில் வைத்து பூஜை செய்யப்படுவது வழக்கமாக இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த 1997 ஆம் ஆண்டு இம்மடத்தின் மடாதிபதி, அந்த மரகதலிங்கத்தை வங்கியில் அடமானமாக வைத்து கடன் வாங்கி இருந்தார். அதன் பிறகு மடத்தில் ஏற்பட்ட பல்வேறு பதவிப் போட்டியில் அந்த மரகதலிங்கம் மீட்க படாமலேயே இருந்துவந்தது. இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஹரதாலுஹாலப்பாவிடம், அப்பகுதி மக்கள் மரகதலிங்கத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து இப்பிரச்சனையை கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா விடம் கொண்டு சென்ற ஹரதாலுஹாலப்பா மரகதலிங்கத்தை மீட்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டார். எடியூரப்பாவின் தலையீட்டுக்கு பிறகு வங்கியிலிருந்து மரகதலிங்கம் மீட்கப்பட்டது. 22 ஆண்டுகளுக்கு பிறகு மீட்கப்பட்ட மரகதலிங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் பத்திரமாக வைக்கப்பட்டது. பிறகு விஜயதசமி அன்று காவல் துறையின் பாதுகாப்புடன் மடத்துக்கு கொண்டுவரப்பட்ட மரகத லிங்கத்திற்கு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இப்பூஜையில் அப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு மரகத லிங்கத்தை வழிபட்டனர். பின்பு மீண்டும் பாதுகாப்பாக மரகதலிங்கம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 22 ஆண்டுகளுக்கு பின்பு மரகதலிங்கத்தை மீட்டுக்கொடுத்த சட்டமன்ற உறுப்பினர் மற்றும் முதலமைச்சருக்கு அப்பகுதி மக்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்கள், ஏற்கனவே மழை வெள்ளத்தால் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் பெய்த கனமழை காரணமாக, மிகப்பெரிய அளவில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று இரவு 10 மணி அளவில் திடீரென பெங்களூரு நகர் முழுவதும் கடுமையான மழை பெய்ய தொடங்கியது. நள்ளிரவு 2 மணி வரை தொடர்ந்த மழை காரணமாக, பெங்களூரின் தொட்டபிதரஹள்ளு, அன்னபூர்ணா நகர் பவானி நகர் ஆகிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. 500க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. ஏறக்குறைய 3 அடி அளவுக்கு சாலைகளில் வெள்ளம் தேங்கியதால், வீடுகள் மற்றும் சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள், மோட்டார் பைக்குகள் மற்றும் ஆட்டோ ரிக்ஷா உள்ளிட்ட வாகனங்கள் நீரில் மூழ்கியது.
இந்நிலையில் தொட்டபிதர ஹள்ளு பகுதியில் அமைந்துள்ள ஏரி மழை வெள்ளம் காரணமாக உடைந்தது. ஏரியில் இருந்து மிக அதிக அளவில் வெள்ளநீர் வெளியாகி பவானி நகர், அன்னபூர்ணா நகர் ஆகிய பகுதிகளில் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மிகப்பெரிய அவதிக்கு உள்ளாகினர். இப்பகுதியில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை களைவதற்காக, மாநகர காவல் ஆணையர் மற்றும் துணை ஆணையர் அப்பகுதிக்கு விரைந்தனர். மேலும் தீயணைப்பு வீரர்கள் அப்பகுதிக்கு வந்து வெள்ளத்தில் சிக்கி கொண்டிருந்த மக்களை மீட்டு பாதுகாப்பான பகுதிகளுக்கு அனுப்பி வைத்தனர்.
கர்நாடகா மாநிலத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இக்கூட்டத்தில் பல்வேறு பிரச்சனைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் தயாராக இருந்தன, இதற்காக எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சிறப்பு ஆலோசனைக் கூட்டங்களும் நடத்தப்பட்டது. சித்தராமையா தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், வெள்ள நிவாரணம் குறித்து எழுப்பப்பட வேண்டிய கேள்விகள் என்ன என்பது பட்டியலிடப்பட்டு, சரியான தரவுகளுடன் கேள்வி கேட்கும் வகையில் பயிற்சிகளும் அளிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் நேற்று கூடிய கர்நாடக மாநில குளிர்கால கூட்டத்தொடரில், கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள சேதம் குறித்து பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை. இதை எதிர்த்து கர்நாடக மாநில எதிர் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் சட்ட மன்ற வளாகத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று காலை அவை நடவடிக்கைகள் தொடங்கியபோது, மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன்பிறகு மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள சேதம் குறித்து பேசுவதற்கு கர்நாடக மாநில சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா அனுமதி கோரினார். ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் பல்வேறு குழுக்கள் தங்கள் அறிக்கைகளை தாக்கல் செய்ய வேண்டியுள்ளதால், அதன்பிறகு விவாதங்களை வைத்துக் கொள்ளலாம் என சபாநாயகர் கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன.
கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று வந்த காங்கிரஸ் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அதன் பிறகு தற்போது பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முந்தைய காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்றபோது பல்வேறு ஊழல்கள், லஞ்சம் ,முறைகேடுகள் நடைபெற்றதாக பல்வேறு தலைவர்கள் மீதும் வழக்குகள் பதியப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டு வருகின்றன.
சில வாரங்களுக்கு முன்பு கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவகுமார் மத்திய அமலாக்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கர்நாடக மாநில முன்னாள் துணை முதலமைச்சரும் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான பரமேஸ்வரா இல்லத்தில் இன்று வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. மருத்துவ தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் மற்றும் வருமான வரி ஏய்ப்பு உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் அவர்மீது வைக்கப்பட்டு, இந்த சோதனை நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டது. பரமேஸ்வராவுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் மற்றும் அவரின் உறவினர்கள் வீடுகள் என அனைத்து இடங்களிலும் வருமான வரி சோதனை நடைபெற்றது. இச்சோதனையில் 300 அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
சோதனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வருமான வரித்துறை அதிகாரிகள், பரமேஸ்வரா மற்றும் அவரது உறவினர்கள் வீட்டிலிருந்து நாலேகால் கோடி ரூபாய் அளவுக்கு ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டதாகவும், மேலும் பல ஆவணங்களும் கைப்பற்றப் பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.
கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ஒவ்வொருவராக மத்திய பொருளாதார குற்றப்பிரிவு துறையினரால் விசாரணை நடத்தப்பட்டு வருவது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெலகாவி சட்டமன்ற காங்கிரஸ் எம்எல்ஏ திருமதி லட்சுமி அவர்களுக்கு சொந்தமான சர்க்கரை ஆலைக்கு. கர்நாடக மாநிலத்தின் கூட்டுறவு வங்கிகளில் இருந்து 300 கோடி ரூபாய் கடன் கொடுத்த விவகாரத்தில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெற்றதாக அமலாக்கப்பிரிவு குற்றம்சாட்டியுள்ளது.
இந்நிலையில் திருமதி லட்சுமி அவர்களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் 300 கோடி ரூபாய் வாங்கிக் கொடுத்ததற்காக, காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான கே.என் ராஜண்ணா, அமலாக்கப் பிரிவினர் முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளார். ஒருநாள் முழுவதும் அமலாக்கப்பிரிவினர் நடத்திய விசாரணையில் கலந்துகொண்ட, ராஜண்ணா, மீண்டும் மீ விசாரணைக்கு அழைக்கப்படுவார் என அமலாக்க பிரிவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் தன்னிடம் நடத்தப்பட்ட விசாரணைகள் குறித்து தெரிவித்திருக்கும் ராஜன்னா, 300 கோடி ரூபாய் கடன் வாங்கி கொடுத்த விவகாரத்தில், லஞ்சம் கொடுக்கப்பட்டதா? என்பது குறித்த கேள்விகள் தன்னிடம் கேட்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் லட்சுமி அவர்களுக்கு சொந்தமான சர்க்கரை ஆலைக்கு வழங்கப்பட்ட கடன் குறித்த ஆவணங்களை அமலாக்க துறையிடம் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளதாகவும். அதற்கு தான் ஒரு வாரம் அவகாசம் வாங்கி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள 15 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலில், பாஜக சார்பில் யார் போட்டியிடப் போவது என்பது குறித்த விவாதங்கள் எழுந்துள்ள. காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளைச் சேர்ந்த 17 எம்எல்ஏக்களின் ராஜினாமா செய்ததன் காரணமாக, கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைந்துள்ளது. இந்நிலையில் பதவிகளை ராஜினாமா செய்த அந்த 17 பேருக்கும், மீண்டும் அதே தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பு தரப்போவதாக எடியூரப்பா தெரிவித்துள்ளார். இதன் காரணமாக பிஜேபியில் புகைச்சல் எழுந்துள்ளது.
திடீரென இப்பொழுது வந்தவர்களுக்கு சீட் வழங்க கூடாது எனவும் ஏற்கனவே நீண்டகாலமாக பாஜகவில் இருப்பவர்களுக்குத்தான் இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டுமெனவும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. எனவே, ஏற்கனவே அந்த தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியடைந்த பாஜக உறுப்பினர்களுக்கு பல்வேறு பதவிகளை வழங்கி சரிக்கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் எடியூரப்பா. ஆனால் இந்த ஒப்பந்தத்துக்கு, ஒசக் கோட்டை தொகுதியில் போட்டியிட்டு, காங்கிரஸ் வேட்பாளர் நாகராஜிடம், குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த, பச்சே கவுடா ஒத்துக்கொள்ளவில்லை.
தனகு ஒசக்கோட்டை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமெனவும், அப்படி வழங்காத பட்சத்தில் நான் மாற்று வழியை தேர்ந்தெடுப்பேன் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு வழங்கப்பட்ட கர்நாடக வீட்டு வசதி வாரியத் தலைவர் பதவியையும் பச்சேகவுடா மறுத்துள்ளார்இதன் காரணமாக கர்நாடக மாநில பாஜகவில் பிளவு ஏற்படலாம் என தெரிகிறது.
கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவராகவும், கர்நாடக மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சித்தராமையா, நேற்று காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார். கர்நாடக மாநிலம் மிகப்பெரிய அளவில் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வரும் நிலையில், நடைபெறும், குளிர்காலக் கூட்டத்தொடரில், சட்டமன்றத்தில் எழுப்ப வேண்டிய பிரச்சினைகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.
மழை வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு உரிய நிவாரணங்கள் சென்று சேர்வது குறித்து, கேள்வி எழுப்ப காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. மேலும் மேலோட்டமாக கேள்விகளை எழுப்பாமல், புள்ளிவிவரங்களுடன் கேள்விகளை எழுப்புமாறு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சித்தராமையா யோசனை தெரிவித்தார். கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா மத்திய அரசிடம் வெள்ள நிவாரண நிதியாக 3500 கோடிகளை கேட்ட போதும், மத்திய அரசு வெறும் 1,500 கோடிகளை மட்டுமே ஒதுக்கியுள்ளது குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைக்க இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் சட்டமன்ற நடவடிக்கைகளை அமைதியாக நடத்த ஒத்துழைக்க வேண்டும் எனவும், கோஷம் இடுவது, சட்டமன்றத்தில் கலவரத்தில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால், மக்களுக்கு காங்கிரஸ் கட்சி மீது கோபம் ஏற்படும் எனவும், ஆகவே முறையான வழியில் கேள்விகளை எழுப்பி உண்மை பிரச்சனைகள் குறித்து மக்கள் மன்றத்தில் கொண்டு சேர்க்க சட்டமன்றத்தில் செயல்பட வேண்டும் என சித்தராமையா காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
கர்நாடக மாநில எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் முதல்வரும், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவருமான சித்தராமையா நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடக மாநில எதிர்க்கட்சித் தலைவராக சித்தராமையாவும், சட்டமேலவை காங்கிரஸ் கட்சித் தலைவராக எஸ்ஆர் பாட்டிலும் நியமிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக இழுபறியில் இருந்து வந்த இப்பிரச்சனை இதன் மூலம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
கர்நாடக மாநில எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கைப்பற்ற காங்கிரஸ் கட்சிக்குள் பல்வேறு போராட்டங்கள் இருந்து வந்த நிலையில், குமாரசாமி ஆட்சியின்போது துணை முதலமைச்சராக பதவி வகித்த, பரமேஸ்வரா கர்நாடக மாநில எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்படுவார் என்று செய்திகள் வெளியானது. மேலும் கர்நாடக மாநில அரசியல் பிரச்சனையை தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் மேலிட பார்வையாளர் மதுசூதனன் மிஸ்திரி, பரமேஸ்வரா அவர்களுக்கு மிகவும் நெருங்கிய நண்பர் என்பதால், அவர் பரமேஸ்வரா அவை கர்நாடக மாநில எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க பரிந்துரை செய்வார் என்றெல்லாம் அவர்கள் சொல்லப்பட்டது.
இந்நிலையில் ஆருடங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சித்தராமையா எதிர்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து சித்தராமையா வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், தன்னை எதிர்க்கட்சித் தலைவராக நியமித்து சோனியாகாந்தி அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் ஆளும் பாஜக அரசு செய்யும் தவறுகளை மக்கள் மன்றத்தில் எடுத்து வைப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் கடந்த இரண்டு மாதமாக பெய்த கடும் மழை காரணமாக மிகப்பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. நீண்ட நாள் போராட்டத்திற்கு பிறகு, கர்நாடக மாநிலத்துக்கு வெள்ள நிவாரண நிதியாக ஆயிரத்து 1200 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு ஒதுக்கிய 1200 கோடி ரூபாய் நிதி எவ்வாறு பயன்படுத்தப்பட உள்ளது என்பது குறித்து கர்நாடக மாநில வருவாய் துறை அமைச்சர் அசோக் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு ஒதுக்கிய 1200 கோடிகளில் 1035 கோடி விவசாயிகளின் பயிர் மற்றும் நில இழப்பீடு தொகையாக வழங்கப்பட உள்ளது என்றும், மீதமிருக்கும் தொகை, மழை பாதித்த மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ள பள்ளி கட்டிடங்களை சரி செய்வதற்கும், புதுப்பிக்கவும் பயன்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். மழை வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் பெட்டி கடைகள், சிறிய கடைகள் உள்ளிட்ட பல்வேறு வியாபார நிறுவனங்கள் சேதமடைந்து உள்ளதாகவும், பா அவற்றை மீட்டெடுக்க, அரசு சார்பில் நிவாரண நிதி வழங்கப்படும் எனவும் கர்நாடக மாநில வருவாய் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் ஒருபுறம் மிகப்பெரிய அளவில் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், வேறு சில மாவட்டங்களில் மிகப்பெரிய அளவில் வறட்சி நிலவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வறட்சி பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு மத்திய அரசின் உதவியை எதிர்பார்க்காமல், மாநில அரசே நிதி உதவி செய்யும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்காக மாநில அரசு 1029 கோடி ரூபாய்களை ஒதுக்கி உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கர்நாடக மாநிலத்தின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில், சட்டமன்ற நடவடிக்கைகளை வீடியோ எடுப்பதற்கும் நேரடி ஒளிபரப்பு செய்வதற்கும் ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு கர்நாடக மாநில எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுவரை கர்நாடக சட்டமன்றத்தில் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் நேரடி ஒளிபரப்பு செய்ய அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது முதலமைச்சர் எடியூரப்பா தலைமையிலான அரசு ஊடகங்களுக்கு சட்டமன்ற நடவடிக்கைகளை படமெடுக்க தடைவிதித்துள்ளது.
எடியூரப்பா தன்னை பலவீனமாக உணர்வதால்தான் சட்டமன்ற நடவடிக்கைகளை ஒளிபரப்பு செய்ய தடை விதித்துள்ளார் என, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இதற்கு முன்பு எடியூரப்பா கர்நாடக மாநில முதலமைச்சராக இருந்தபோது அவருடைய அமைச்சரவை சகாக்களான அமைச்சர்கள் லட்சுமண் சவுதி மற்றும் சிசி பாட்டில் ஆகியோர் சட்டமன்றம் நடந்துகொண்டிருந்தபோது, கைப்பேசியில் ஆபாச படம் பார்த்துக் கொண்டிருந்ததை ஊடகங்கள் வெளியுலகுக்கு கொண்டு வந்தது. இது பாஜகவுக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தியிருந்தது.
அதன் காரணமாகவே தற்போது ஊடகங்களை பாஜக அனுமதிக்கவில்லை என்ற கருத்தும் நிலவி வருகிறது. கடந்த பாஜக ஆட்சியில் சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சினைகளை விவாதிக்க வேண்டிய இடத்தில் ஆபாச படம் பார்த்த இருவரும், தற்போது துணை முதல்வர் மற்றும் முக்கிய அமைச்சர் பதவி பெற்றிருப்பதும் பாஜகவின் உண்மை முகத்தை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. ஊடகங்களை சட்டமன்றத்தில் அனுமதிக்காதது சர்வாதிகாரப் போக்கை காட்டுகிறது என மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.