All publications of Vishnu Kutty . Chennai , India
சிரஞ்சீவி நடிப்பில், சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கும் படம் நரசிம்ம ரெட்டி. ஆந்திர மாநிலத்தில் ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடிய போராளியான நரசிம ரெட்டி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக உருவாகியிருக்கும் இப்படத்தில் சிரஞ்சீவிக்கு நரசிம்மரெட்டி பாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, அமிதாப்பச்சன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இப்படம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியானது. இப்படத்திற்கு ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் இப்படத்தை பார்ப்பதற்கு தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை அவர்களுக்கு, நடிகர் சிரஞ்சீவி அழைப்பு விடுத்திருந்தார். சிரஞ்சீவியின் அழைப்பை ஏற்று நேற்றுமுன்தினம் ஹைதராபாத்தில் உள்ள ஒரு திரையரங்கில் இப்படத்தை தன் குடும்பத்துடன் பார்த்து ரசித்தார் தமிழிசை. படத்தை பார்த்துவிட்டு சிரஞ்சீவி மற்றும் படக்குழுவினரை பாராட்டினார் தமிழிசை.
மேலும் தன்னுடைய டுவிட்டரிலும், இப்படம் குறித்து மிகவும் பாராட்டியுள்ளார், தமிழிசை. மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளுக்கு அஞ்சலி செலுத்துவது போல் இப்படம் அமைந்திருக்கிறது என்றும், இந்திய சுதந்திர போராட்டத்தில் தென்னிந்தியர்களின் பங்கு ஏப்பேர்பட்டது என்பதை உணர்த்தும் வகையில் இப்படம் அமைந்துள்ளது எனவும், அவர் தன்னுடைய ட்விட்டர் தளத்தில் பாராட்டியுள்ளார். மேலும் நரசிம்ம ரெட்டி அவர்களின் உற்ற நண்பனாக உற்ற நண்பனான ராஜபாண்டி என்ற பாத்திரத்தில் நடித்திருக்கும் விஜய் சேதுபதியையும், குறிப்பிட்டு பாராட்டியுள்ளார் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்.
ஆந்திர மாநிலத்தை ஆட்சி செய்யும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை என்று கூறி பாஜகவின் விவசாய அணியான கிசான் மோர்ச்சா அமைப்பு, குண்டூரில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது. மாநில புகையிலை வாரிய தலைவரும், பாரதிய ஜனதா கட்சியின் ஆந்திர மாநில செய்தி தொடர்பாளருமான ரகுநாத் பாபு இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், இதற்கு முன்பு ஆந்திர மாநிலத்தை ஆட்சி செய்த தெலுங்கு தேசம் கட்சியை போலவே ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது இல்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.
விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தினால்தான் , தெலுங்குதேசம் கட்சி மீது மக்கள் கோபம் அடைந்து அக்கட்சியை வீட்டுக்கு அனுப்பி உள்ளனர் எனவும், தெலுங்கு தேசம் கட்சிக்கு ஏற்பட்ட நிலைமை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கும் ஏற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஒய்.எஸ்.ஆர். ரைத்து பரோசா திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் எனவும், விவசாய காப்பீடு தொகைகள் விரைவில் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார். ஆந்திர மாநிலத்தின் முக்கிய கட்சியான தெலுங்கு தேசம் கட்சி, விவசாயிகளுக்காக போராட நிலைமையில், அதற்கு பதிலாக பாரதிய ஜனதா கட்சி போராட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆந்திர மாநிலத்தின் காக்கிநாடாவில் அமைந்துள்ள சத்திய பிரசன்னா நகரில் இருக்கும் பாஸ்கரா அடுக்குமாடி குடியிருப்பு சேதம் அடைந்ததைத் தொடர்ந்து, காக்கிநாடா மாநகராட்சி அந்த குடியிருப்பை இடிப்பதற்கு உத்தரவிட்டது. ஆனால் இதை எதிர்த்து பில்டர்கள் நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கியுள்ளனர். இந்நிலையில் மாநகராட்சியின் உத்தரவை செயல்படுத்த வேண்டுமென கோரி, குடியிருப்புவாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காக்கிநாடாவில் உள்ள பாஸ்கரா எஸ்டேட் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில், மூன்று தூண்கள் சேதமடைந்தன. இதன் காரணமாக எப்போது வேண்டுமானாலும் கட்டிடம் இடிந்து விழும் எனக்கூறி, அந்த அடுக்குமாடி குடியிருப்பை இடிக்க, காக்கிநாடா மாநகராட்சி உத்தரவிட்டது. இதையடுத்து அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த 40 குடும்பங்களும் வெளியேற்றப்பட்டது. இந்நிலையில் அடுக்குமாடி குடியிருப்பை இடிக்க கூடாது என்றும், அதற்கு பதிலாக மறுசீரமைப்பு செய்ய வேண்டுமெனவும் அந்த குடியிருப்பை கட்டிய பில்டர்ஸ் நிறுவனம் காக்கிநாடா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை பதிவு செய்து கொண்ட நீதிமன்றம், பாஸ்கரா எஸ்டேட் அடுக்குமாடி குடியிருப்பை இடிப்பதற்கு இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில் அடுக்குமாடி குடியிருப்பை முறையாக கட்டாத பில்டர்களுக்கு எதிராக, குடியிருப்பு வாசிகள் மற்றும் அனைத்து கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தரமில்லாத கட்டிடத்தை கட்டியதற்காக கட்டுமான நிறுவனம் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆந்திர மாநிலத்தின் தெலுங்கு கங்கை திட்டத்தின் சிறப்பு துணை ஆட்சியராக செயல்பட்டுவந்த நரசிம்மம் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் ஆந்திரா ஊழல் தடுப்பு காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் ஏராளமான பணம், நகைகள் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
1989ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆந்திர மாநில அரசுப் பணியில் சேர்ந்த நரசிம்மம். நெல்லூர் மற்றும் காவிலி ஆகிய பகுதிகளில் சாலை போக்குவரத்து ஆய்வாளராக பணியாற்றிய இவர், அதன்பிறகு 2002 ஆம் ஆண்டு வட்டாட்சியர் ஆகவும், 2011ஆம் ஆண்டு துணை ஆட்சியராகவும் பதவி உயர்வு பெற்றார். சோமசீலா மற்றும் தெலுங்கு-கங்கா திட்டங்களின் சிறப்பு துணை ஆட்சியராக பொறுப்பேற்ற அவர் ராப்பூரில் பணியாற்றி வந்தார்.
நரசிம்மம் மீத் ஏராளமான ஊழல் மற்றும் லஞ்ச குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், அவருக்கு சொந்தமான இடங்களில் ஆந்திர மாநில ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் ஏராளமான தங்க நகைகள் மற்றும் பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டன. மேலும் நெல்லூர் மாவட்டம் மற்றும் பிரகாசம் மாவட்டத்துக்கு உள்ளிட்ட பகுதிகளில், அவர் பெயரில் ஏராளமான விவசாய நிலங்கள் வாங்கப்பட்டு இருப்பதும் இந்த சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது மனைவி மற்றும் உறவினர்கள் பெயரிலும் பல்வேறு இடங்களில் நிலங்கள், வீடுகள், அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நரசிம்மம் அவர்கள் மீது ஆந்திர மாநில ஊழல் தடுப்பு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹுசர் நகர் இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த வேட்பாளர் பத்மாவதி மீது தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் பொதுச்செயலாளர் சீனிவாச ரெட்டி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.
தெலுங்கானா பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவராக பதவி வகிக்கும் உத்தம் ரெட்டியின் மனைவி பத்மாவதி, ஹுசர் நகர் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிருகிறார். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், ஹுசர் நகர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்திருக்கும் ரேவுரு முதிராஜ் கோவிலுக்கு உத்தம்ரெட்டி மற்றும் அவர் மனைவி பத்மாவதி ஆகியோர் இணைந்து நன்கொடை அளித்துள்ளது தேர்தல் விதிமுறைகளை மீறிய செயல் என புகார் அளிக்கப்பட்டுள்ளது.
உத்தம் ரெட்டிக்கு சொந்தமான ரெயின் சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் பெயரில் மேற்கண்ட கோவிலுக்கு 3 லட்ச ரூபாய் காசோலையாக வழங்கப்படுள்ளது என்று தெரிவித்திருக்கும் தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சியின் பொதுச்செயலாளர் ஸ்ரீனிவாஸ் ரெட்டி, அதற்குறிய ஆவணங்கள் மற்றும் வழங்கப்பட்ட காசோலை நகல் ஆகியவற்றை தேர்தல் ஆணையத்தில் கொடுத்துள்ளனர். இதன் காரணமாக தெலுங்கானா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்தம் ரெட்டியோ அவர் மனைவி பத்மாவதியோ தங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் எதுவும் கொடுக்கவில்லை என்றும், சிமெண்ட் ஆலை நிர்வாகத்தில் பெயரில் கொடுக்கப்பட்ட காசோலைக்கு அவர்கள் பொறுப்பேற்க முடியாது எனவும் தெலுங்கானா காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
ஆந்திர மாநிலம், ஹோல குண்டா பகுதியிலுள்ள தேவரகட்டு என்ற ஊரில் ஆண்டுதோறும் நவராத்திரி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த பண்டிகையின் முக்கிய நிகழ்வான மல்லேஸ்வர சுவாமி மற்றும் பார்வதி அம்மன் திருவீதி உலா வரும்போது, அப்பகுதியில் உள்ள பனிரெண்டு கிராமங்களை சார்ந்த மக்கள், தங்கள் கைகளில் சிலம்பாட்ட குச்சிகளை ஏந்தி ஊர்வலம் வருவதும், பாரம்பரிய முறைப்படி தங்களுக்குள் சண்டையிட்டுக்கொள்வதும் வழக்கம். அப்படி நடைபெற்ற சண்டையில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள அடோனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹோலகுண்டா தேவரகட்டு பகுதியில் 800 அடி உயரத்தில் அமைந்திருக்கும், மலை மல்லேஸ்வர சுவாமி கோவில் மலை உச்சியில் நடத்தப்பட்ட இந்த சிலம்ப சண்டையை, கர்னூல் மாவட்ட காவல் துறையினர் ட்ரோன்கள் மூலம் கண்காணித்து வந்தனர். இந்த சண்டை குறித்தும், சண்டையில் 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தது குறித்தும் தெரிவித்திருக்கும் கர்னூல் மாவட்ட காவல் துறையினர், இச்சண்டை பாரம்பரிய விளையாட்டு முறைப்படி நடைபெற்றுள்ளது எனவும், முன் விரோதம் காரணமாகவோ அல்லது இரு பிரிவினருக்கிடையேயான மோதலோ இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், விளையாட்டாக நடக்கும் சண்டை என்றாலும், யாரும் அத்து மீறி சென்றுவிடாதபடி காவல் துறையினர் கண்காணித்து வந்ததாகவும், காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆந்திராவின் பல மூத்த அரசியல் தலைவர்கள், பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி, ஜெகன்மோகன் ரெட்டியின் தலைமையை ஏற்றுக்கொண்டு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு வந்துள்ளனர். ராஜ மகேந்திரவரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அகுலா சத்தியநாராயணா, முன்னாள் ஆந்திர மாநில சட்ட மேலவை உறுப்பினர் ஜுபுடி பிரபாகரராவ், மற்றும் பிசிசி கட்சி செயலாளர் தாஸ் வெங்கட்ராவ் ஆகியோர், நேற்று முன்தினம் ஜெகன்மோகன் ரெட்டி முன்னிலையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர்.
2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் ராஜ மகேந்திரவரம், தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அகுலா சத்யநாராயணா. இவர் 2019ஆம் ஆண்டு பாஜகவிலிருந்து விலகி பவன் கல்யாண் அவர்களின் ஜனசேனா கட்சியில் இணைந்து, ராஜமுந்திரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு, தோல்வி அடைந்தார். நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பின்பு அரசியலில் இருந்து விலகி இருந்த சத்யநாராயண, தற்போது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். இதேபோல் ஜெகன்மோகன் ரெட்டியின் தந்தையார் ஒய் எஸ் ராஜசேகர் ரெட்டி உயிருடன் இருந்தபோது, அவருடன் இணைந்து காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டு வந்த ஜுபுடி பிரபாகர் ராவ், ராஜசேகர் ரெட்டி மறைவுக்கு பின்பு ஜெகன்மோகன் ரெட்டி தொடங்கிய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றினார். ஆனால் அக்கட்சி அடுத்தடுத்த தேர்தல்களில் தோல்வியடைந்ததால், அவர் தெலுங்கு தேசம் கட்சிக்கு சென்றார். தற்போது, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்திருக்கும் நிலையில் மீண்டும் அக்கட்சிக்கு திரும்பியுள்ளார்.
ஜெகன்மோகன் ரெட்டி, ஆந்திர மாநிலத்தின் முதல்வராக ஆட்சியில் அமர்ந்த பிறகு, தெலுங்கு தேசம் கட்சியை சார்ந்தவர்கள் மீது தொடர்ந்து வழக்குகள் பாய்ந்து வருகிறது. தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் என பல்வேறு தரப்பினர் மீதும் பல வழக்குகள் தொடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பூமா அகிலா பிரியாவின் கணவர் மீது ஆந்திர காவல் துறை வழக்கு தொடர்ந்துள்ளது. காவல்துறையினரை தாக்க முயன்றதாக வழக்கு மற்றும் கொலை முயற்சி வழக்குகள் என இரு வழக்குகள் பூமா அகிலா பிரியாவின் கணவர் பார்கவ ராமுடு மீது பதியப்பட்டுள்ளது.
தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியின்போது அமைச்சர் பதவி வகித்த பூமா அகிலா பிரியா அவர்களின் கணவர் பார்கவ ராமுடு மீது கர்னூல் மாவட்டத்திற்குட்பட்ட அல்லகடா காவல் நிலையத்தில் 2 வழக்குகள் பதியப்பட்டு இருந்த நிலையில், அந்த வழக்கு குறித்து விசாரிப்பதற்காக பார்க்கவ ராமுவை அழைத்துச்செல்ல காவல்துறையினர் அவர் வீட்டுக்கு சென்றனர். ஆனால் காவல்துறை இருக்கு காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு கொடுக்க மறுத்த பார்கவ ராமுடு, காவல்துறை ஆய்வாளர் மற்றும் துணை ஆய்வாளர் மீது காரை ஏற்ற முயற்சி செய்துவிட்டு அங்கிருந்துது தப்பிச் சென்றுள்ளார். ஏற்கனவே இரண்டு வழக்குகள் பதியப் பட்ட நிலையில், காவலர்களை தாக்க முயற்சி செய்த வழக்கும் அவர்மேல் பதியப்பட்டு அவரை காவல்துறையினர் தேடிவருகிறார்கள்.
போதிய மழை இல்லாத போது வற்ட்சியின் காரணமாக மக்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். அதேநேரம் தேவைக்கு அதிகமான மழை பெய்தாலும் பிரச்சனைதான். ஆந்திர மாநிலத்தின் அனந்தபூர் மாவட்டத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளத்தால் மிகப்பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. ஏறக்குறைய பத்து வட்டங்கள் நீரில் மூழ்கியுள்ளது. குறிப்பாக சில இடங்களில் 10 அடிக்கு மேல் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இடியுடன் கூடிய மழை பெய்து வருவதால் ஆங்காங்கே மின்னல் தாக்கி பலர் உயிரிழக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஆந்திர மாநிலத்தின் குண்டூர் பகுதியில் அமைந்துள்ள வேடுள்ளபள்ளே கிராமத்தில் மின்னல் தாக்கி 150 ஆடுகள் இறந்து போனது அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
கால்நடைவளர்ப்பு வேடுள்ளபள்ளே ஊரில் வசிக்கும் மக்களின் முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. குறிப்பாக இப்பகுதி வறட்சி பகுதி என்பதாலும், விவசாயம் பெரிய அளவில் செழிப்பாக இல்லை என்ற காரணத்தினாலும் ஆடுகளை வளர்த்து தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வருகிறார்கள் அப்பகுதி மக்கள்.
இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த வீரய்யா என்பவரின் ஆட்டு பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 150 ஆடுகள் மின்னல் தாக்கி பலியாகி உள்ளது. இந்த ஆடுகளின் மதிப்பு 7 லட்சம் ரூபாய் என்பதால், தாங்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அரசு சார்பில் நிவாரண உதவி வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
தெலுங்கானா மாநிலம் முழுவதும் உள்ள போக்குவரத்து ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், அம்மாநில மக்கள் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த போக்குவரத்து ஊழியர்கள் 48,000 பெயரை ஒரே நாளில் டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார், தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவ். இதை எதிர்த்து போக்குவரத்து ஊழியர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். தாங்கள் முறைப்படி அரசுக்கு அறிவித்துவிட்டு வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் எனவே இந்த வேலை நிறுத்தப் போராடம், விதிமுறையை மீறிய செயல் அல்ல என்றும் அவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆயினும் டிஸ்மிஸ் நடவடிக்கையை திரும்பப் பெறும் முடிவில் சந்திரசேகரராவ் இல்லை. தற்காலிக ஓட்டுனர்கள் பலரை நியமித்து நிலைமையை சமாளிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது தெலுங்கானா மாநில அரசு. இந்நிலையில் தொழிற்சங்கங்களில் உள்ள பலரும் வேலை பறிபோய்விடும் என்று பயந்து பணிக்கு திரும்புவார்கள், என்று எதிர்பார்த்த அரசுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. ஒட்டுமொத்த போக்குவரத்து தொழிலாளர்களும் என்ன நடந்தாலும் வேலை நிறுத்தத்தை கைவிடுவதாக இல்லை என்று கூறி தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மேலும் பொதுமக்களை திரட்டி, பொதுமக்கள் ஆதரவுடன் தங்கள் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாகவும் போக்குவரத்து தொழிலாளர் சங்கங்கள் தெரிவித்துள்ளன. அரசு மற்றும் போக்குவரத்து ஊழியர் சங்கங்களுக்கு இடையே நடைபெறும் ஈகோ யுத்தத்தால், தெலுங்கானா மாநிலம் முழுவதும் அன்றாடம் பணிக்கு செல்லும் பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.